சென்னை: சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் 38.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய டிச.8-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 2023 ஜன.1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன்மாளிகையில் நேற்று நடந்தது. வாக்காளர் பட்டியலை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய்,நிதி) விஷு மகாஜன் வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் அதை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர் பட்டியல் தொடர்ந்து திருத்தப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 19 லட்சத்து 15 ஆயிரத்து 611 ஆண் வாக்காளர்கள், 19 லட்சத்து 75 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்கள், 1,058 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3.06 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தொடர் திருத்தப் பணிகள் மூலம் 1 லட்சத்து 1,483 ஆண்கள், 1 லட்சத்து 13 ஆயிரத்து 343 பெண்கள், 94 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 920 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், 2023 ஜன.1-ம் தேதி 18 வயதை பூர்த்தி செய்பவர்கள், 17 வயது முடிந்து 2023 செப்.30-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் வரும் டிச.8-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். நவ.12, 13 மற்றும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய விடுமுறைநாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதைபொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். https://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் 3,723 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 284 சாவடிகள், எழும்பூர் தொகுதியில் 169 சாவடிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜிலானி பப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.