தமிழகம்

ஒரு மதிப்பெண்ணில் ஆசிரியை பணி வாய்ப்பை இழந்த பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்க உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித் தேர்வில் ஒரு மதிப்பெண் ணால் பணி வாய்ப்பை இழந்த பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.வினோபிரதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதினேன். கட் ஆப் மதிப்பெண்ணைக் காட்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றதால் என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவில்லை.

ஆசிரியர் பணித் தேர்வில் கேட்கப்பட்ட 71 மற்றும் 108 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்துள்ளேன். அந்த கேள்விகளுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் இரு கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்துள்ளார். பின்னர் 71-வது கேள்வி ஆட்சேபம் காரணமாக நீக்கப்பட்டுள்ளது. 108-வது கேள்விக்கு மனுதாரர் சரியாக பதில் அளித்துள்ளார். ஆனால் விடைச்சுருக்கத்தில் இருக்கும் தவறான பதிலை குறிப்பிடவில்லை எனக் கூறி மனுதாரருக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது.

எனவே, மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் 150-க்கு 98.773 மதிப்பெண் பெற்றதாக கருதி அவருக்கு ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT