தமிழகம்

வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு செயல்படாததை எதிர்த்து பொதுநல வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உயர்நிலை கண்காணிப்புக் குழு செயல்படாமல் இருப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திண்டி வனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய இயக்குநர் வே.அ.ரமேசுநாதன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வன்கொடு மையால் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு போன்றவற்றை ஆய்வு செய்து, சட்டத்தை முழுமையாக அமல்படுத் துவதற்காக மாநில அளவில் உயர் நிலை கண்காணிப்புக் குழு செயல்பட வேண்டும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மாநில முதல்வர் தலைமையிலான இந்தக் குழு, ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கட்டாயம் கூட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 1996-ம் ஆண்டு இந்தக் குழு அமைக்கப் பட்டாலும் 2010-ம் ஆண்டில் ஒரு முறையும், 2012-ம் ஆண்டில் ஒரு முறையும் என மொத்தமே 2 முறை தான் கூடியுள்ளது. அந்தக் கூட்டங் களில்கூட குழுவின் தலைவரான முதல்வர் பங்கேற்கவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தைக் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய இக்குழு, அந்தப் பணிகளை செய்யாமல் மிகவும் அலட்சியமாக உள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, உயர் நிலை கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை தவறாமல் கூட்டும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜெ.சரவணவேல் ஆஜரானார்.

அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT