நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக 50,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், பெரும்பாலான மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பையொட்டி, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட 27 கிராமங்களில் உள்ள 700 விசைப் படகுகள், 3,000-க்கும் அதிகமான பைபர் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நாகை துறைமுகம் மற்றும் அந்தந்த மீனவ கிராமங்களில் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 50,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களை உடனடியாக கரை திரும்புமாறு செல்போன் மூலம் மீனவ கிராம பஞ்சாயத்தார் தகவல் அனுப்பியுள்ளனர்.
ஆட்சியர் எச்சரிக்கை: இலங்கை கடற்பகுதியில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் நிலை உள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் சுழல் காற்று வீசக் கூடும்.
மேலும், இன்றுடன் 3 நாட்களுக்கு (நவ.10, 11, 12) தொடர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனுடன், கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.