புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 71.38 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறியுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரியில் 18 வயது நிரம்பியோர் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். அதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் 19, 20, டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
புதுச்சேரி, மாஹே, ஏனாம் உட்பட 25 தொகுதிகளை அடங்கிய புதுச்சேரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் - 3,93,963, பெண்கள் - 4,41,322, மாற்று பாலினத்தவர் – 116 என மொத்தம் 8,35,401 வாக்காளர்கள் உள்ளனர். இம்முறை முதல் முறையாக 2023-ம் ஆண்டு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 18 வயது பூர்த்தி அடைய உள்ளோரும் தற்போதே விண்ணப்பங்களை தரலாம். அவர்கள் வயது பூர்த்தி அடையும் போது பட்டியலில் பெயர் இணைந்து விடும்.
மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் புதிய வாக்காளர்களின் பெயர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சேர்க்க பிரத்யேக உதவி வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கான பிரத்யேக பணியினை மேற்கொள்வார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 71.38 சதவீத வாக்காளர் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர். குறிப்பாக, கிராமப்புறங்களை சேர்ந்த தொகுதி மக்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியல் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மீதிமுள்ள 29 சதவீத வாக்காளர்கள் சேர்க்கவேண்டும். வாக்காளர் பட்டியலில் செல்போன் எண்ணையும் இணைக்கலாம். நாடு முழுக்க 10 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். இதன் மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக செய்திகளை அனுப்ப இயலும். இது அவரவர் சொந்த விருப்பத்தின்படியே இணைக்கலாம்" என்று ஆட்சியர் வல்லவன் கூறினார்.