கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம் 
தமிழகம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க கோரிய வழக்கு: நிலைப்பாட்டைத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ளது இசிஆர் சர்வதேச பள்ளி. இப்பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கி, தீ வைத்து சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டது. அரசு அமைத்த ஆய்வுக் குழுவும் ஆய்வு செய்துள்ளது. எனவே, பள்ளியைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா?, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், "ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT