மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் செல்போனுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக பலர் செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தை படம் பிடிக்கின்றனர். கோயில் சிலைகள் முன்பு நின்று கொண்டு செல்பி எடுக்கின்றனர். இவர்களின் செயலால் உண்மையிலேயே தரிசனம் செய்யும் நோக்கத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு: ''தமிழக கோயில்களில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலை உள்ளது. கோயில்களில் அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களின் தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் வெளியிடுகின்றனர்.
திருப்பதி கோயில் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழகத்தில் சாமி சிலைகள் முன்பு நின்று கொண்டு செல்பி எடுக்கின்றனர். கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோயிலுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது.
எனவே, திருச்செந்தூர் கோயில் உள்ளே செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்து இந்து அறநிலையத் துறை ஆணையர் உடனடியாக உத்தரவிட வேண்டும். திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். திரும்ப ஒப்படைக்கக்கூடாது.
கோயில் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதிக்க வேண்டும். அதன் பிறகே பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். கோயில் உள்ளே செல்போன் கொண்டுச் செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சுற்றறிக்கை நகலை அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.