பாகிஸ்தான் சிமெண்ட் உட்பட அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய ஊடுருவல், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு, பயங்கரவாத, தீவிரவாத, பிரிவினைவாத செயல்கள் போன்றவற்றால் அப்பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வியாபாரம் நடைபெறாமல், பொருளாதாரத்தில் தடை ஏற்பட்டு, பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் போக்குவரத்து மூலம் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் சிமெண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகத்துக்கு மாதம் தோறும் சுமார் 10 லட்சம் மூட்டைகளில் பாகிஸ்தான் நாட்டு சிமெண்ட் இறக்குமதியாகிறது. இந்த சிமெண்ட்டின் தரம் நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிமெண்ட்டின் தரத்தை விட குறைவானது.
பாகிஸ்தான் சிமெண்ட் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு தரம் குறைந்த சிமெண்டை பயன்படுத்தினால் கட்டிடம் சேதமடைந்து, பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பாகிஸ்தான் நாட்டின் சிமெண்ட்டை பயன்படுத்தும் போது நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிமெண்ட்டின் விற்பனை குறைந்து, பொருளாதார முன்னேற்றம் தடைபடும்.
எனவே இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்ல சுமூக நட்புறவு ஏற்படும் வரை பாகிஸ்தான் சிமெண்ட் உட்பட அந்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு பொருளும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதை தற்காலிகமாக தடை செய்ய மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும்.
மேலும் நம் நாட்டிலேயே சிமெண்ட் உட்பட அனைத்து பொருட்களின் உற்பத்தியை பெருக்கி, நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய, நல்ல பல திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.