சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, சென்னையில் இருந்து மெட்ரோ ரயில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலாதுறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை அமைச்சர் கிஷன் ரெட்டி 2 நாள் பயணமாக சென்னைக்கு வந்துள்ளார். சென்னை வடபழனி மெட்ரோ ரயில்நிலையத்தில் அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பயணிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
பிறகு, வடபழனி முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில்பயணம் செய்த அவர், பயணிகளிடம் உரையாடி, மெட்ரோ ரயில்பயண அனுபவங்களை கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியதாவது: பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில், மெட்ரோ ரயில் சேவையை அனைத்து நகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறோம். பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிவிட்டது. பல நகரங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் பெட்ரோலிய வளத்தை சேமிக்கவும் மெட்ரோ ரயில் போக்குவரத்து உதவுகிறது. மற்ற போக்குவரத்து வசதியைவிட, மெட்ரோ ரயில் கட்டணம் குறைவு. இதன்மூலம், மக்களுக்கு சேவை அளிக்கும் முக்கிய தூணாக மெட்ரோ ரயில் போக்குவரத்து விளங்குகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முழுஒத்துழைப்பு அளித்து வருகிறது.தேவையான நிதியும் ஒதுக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக தமிழக அரசுக்கும் நிதி ஒதுக்கி உள்ளோம். கூடுதல் பணிகளுக்கும் நிதி ஒதுக்கி வருகிறோம்.
முதல் நிலை நகரங்களில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்து, 2-ம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தொடங்கி உள்ளோம்.நாடு முழுவதும் பிரதான நகரங்களில் விமான நிலையம் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் இணைப்பு தருமாறுமாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், பரந்தூர்விமான நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, புதிய விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ளும். அதிக பயணிகள் வரும் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தி வருகிறோம். நாளுக்குள் நாள் ஆதரவு பெருகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, சென்னைமெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் (திட்டம்) டி.அர்ச்சுனன், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.