தமிழகம்

நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க மாநில, தேசிய, சர்வதேச அளவில் வழிமுறையை உருவாக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு நேற்று நடந்த 7-வது உலக சுகாதார மாநாட்டில் அமைச்சர் பேசியதாவது: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த மனித குலமும் கரோனா பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதற்காக பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் கூடிய ஒரு வழிமுறையை நாம் உருவாக்க வேண்டும்.

புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாகவும், பெரும்பாலான மக்களால் வாங்க முடியாதவையாகவும் உள்ளது. முறையற்ற ஆண்டிமைக்ரோபியல் பயன்பாடும் சிக்கலை ஏற்படுத்துகிறது. மருத்துவ நிறுவனங்கள், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்களுக்கு முறையான மருந்து தேர்வு, முறையான பரிசோதனை, சிகிச்சையின் காலம், தடுப்பூசிகள், விரிவான தொற்று கட்டுப்பாட்டுத் திட்டங்களைக் கற்பிக்க வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள பொதுச் சுகாதார நிறுவனங்களில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் பல மருந்து எதிர்ப்பு உருமாற்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு சிறந்த புரிதல், கூடுதல் ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் நிதிஉதவி ஆகியவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT