தமிழகம்

நில அபகரிப்பாளர்களுடன் கைகோத்து கோடிக்கணக்கில் மோசடி: செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ரியல் எஸ்டேட் மாபியாக்களுடன் கூட்டு சேர்ந்து சொத்துகளுக்கு வில்லங்கம் ஏற்படுத்தி அடிமாட்டு விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ராயப்பேட்டையை சேர்ந்த வெற்றியழகன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் எனது மனைவிக்கு சொந்தமான 16,104 சதுரஅடி நிலம் உள்ளது. இதுதவிர, 19,622 சதுரஅடி நிலத்துக்கு என்னிடம் பொதுஅதிகாரம் உள்ளது.

இந்த நிலங்களுக்கு 1976-ம் ஆண்டுக்குரிய தாய் பத்திரம் எங்களிடம் உள்ளது. ரியல் எஸ்டேட் மாபியாக்களுடன் கூட்டணி அமைத்து யாரோ ஒருவர் கொடுத்தபுகாரின்பேரில், இந்த நிலங்களுக்கான பத்திரங்களை செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளர் எஸ்.ராஜாரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘மாவட்டப் பதிவாளரான எஸ்.ராஜாவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது என்பதால் 100ஆண்டுகள் பழமையான சொத்து பத்திரங்களைக்கூட அவர் செல்லாது எனக் கூறி வருகிறார். நாவலூரில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ளன என்பதால் ரியல் எஸ்டேட் மாபியாக்களுடன் கூட்டணி சேர்ந்து, அதிக விலை மதிப்புமிக்க சொத்துகளின் மீது வில்லங்கத்தை ஏற்படுத்தி, அடிமாட்டு விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுத்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார். இவருக்கு பின்னால் மிகப்பெரிய மோசடிக் கும்பல் இயங்கி வருகிறது’’ என வாதிடப்பட்டது. ‘‘மாவட்டப் பதிவாளரான ராஜா மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க உதவி ஐஜி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன்காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒரு சொத்து பத்திரம் தொடர்பாக மாவட்டப் பதிவாளர் தாமாக முன்வந்து விசாரணை நடத்தலாம் என்ற அதிகாரத்தை தவறாக, பணத்துக்காக பயன்படுத்தினால் அதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தலாம். சொத்து தொடர்பாக வந்த மொட்டை கடிதங்களை அடிப்படையாக வைத்து மாவட்டப் பதிவாளர் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி 30முதல் 90 ஆண்டுகள் பழமையான பத்திரங்களை போலி எனக்கூறி ரத்து செய்துள்ளார். இந்த நிலங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்திய சாட்சிகள் சட்டத்தின்படி 30 ஆண்டுகளுக்கு பழமையான பத்திரங்கள் புராதன ஆவணங்கள். அந்த ஆவணங்களே செல்லாது என அறிவித்துள்ளார். ஓஎம்ஆர் சாலையில் உள்ள நிலங்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும்போது நில அபகரிப்பாளர்களுடன் கைகோத்து மாவட்டப் பதிவாளர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

எனவே, இந்த அதிகாரி செய்துள்ள சட்டவிரோத செயல்கள் குறித்து முறையாக புலன் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இந்த அதிகாரி மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அதில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT