மதுரை: பாலியல் பலாத்கார புகார் அளிக்க வந்த பெண்ணை 20 நாட்களாக போலீஸார் அலைக்கழித்தது தொடர்பாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் மூங்கில்பட்டியைச் சேர்ந்த ராஜா மணி என்ற பெண், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது தங்கைக்கு 38 வயதாகிறது. அவருக்கு திருமணமாகவில்லை. எங்களின் தாய், தந்தை இறந்துவிட்டதால் நத்தம் விளாம்பட்டியில் வசிக்கிறார். எனது தங்கை மதுரை மாடக்குளத்தில் உள்ள தேவாலயத்துக்கு அடிக்கடி செல்வார். அக். 5-ம் தேதி காலை விளாம்பட்டியில் இருந்து மாடக்குளம் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றார்.
அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் என் தங்கையிடம் உங்கள் குடும்பத்தில் அனைவரையும் தெரியும், விளாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிக் கொண்டார்.ஆனால், அவர் காரை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் மதுரை மாவட்டம், சத்திரப்பட்டியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிக்குத் தங்கையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சத்திரப் பட்டியில் இறக்கிவிட்டுச் சென்றார்.
இது குறித்து அவர் சத்திரப்பட்டி, நத்தம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் அளித்த புகாரை போலீஸார் விசாரிக்க மறுத்துவிட்டனர். இதனால் தென் மண்டல ஐ.ஜி.யிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் சத்திரப்பட்டி போலீஸார் தங்கையை நேரில் அழைத்து விசாரித்தனர். பின்னர் அவரை எங்களிடம் ஒப்படைக்காமல் காப்பகத்தில் சேர்த்தனர். காப்பகத்தில் தங்கையைப் பார்க்க அனுமதிக்க வில்லை.
இதனால் தங்கையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந் தது. அப்போது மனுதாரரின் தங்கையை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் நீதிபதிகளிடம், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான தன்னை போலீஸார் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் அலைய விட்டனர்.
அக்.5-ல் சம்பவம் நடந்தது. ஆனால், அக்.29-ல்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சகோதரி உடன் செல்வ தாகக் கூறினார். இதையடுத்து அவரை சகோதரியுடன் செல்ல அனுமதித்த நீதிபதிகள், ஒரு பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். 20 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு தொடர்பாக மதுரை, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பி.க்கள்) பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.