திண்டுக்கல்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் காந்திகிராம பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புப் பிரிவினர் நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத் தில் நவ.11-ம் தேதி நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து ஆய்வு செய்ய மத்தியப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்று காந்திகிராமம் வந்தனர். விழா அரங்கம், ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பிரதமர் வந்து செல்லும் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து பல்கலைக்கழகத் தில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தில் உளவுத் துறை ஐ.ஜி. செந்தில் வேலன், டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. வீ.பாஸ்கரன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புப் பிரிவினர் ஆலோசனைகள் வழங்கினர். பல்கலைக்கழக வளாகம் நேற்று முதல் போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்கள் முதல் அனைவரும் பரிசோதிக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தைச் சாரா தவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
ஹெலிபேட் தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் சுழற்சி முறை யில் பணியில் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்தார். பிரதமர் பங்கேற்கும் உள் அரங்கத்தில் பணிகள் முடிவடைந்து இன்று முதல் மத்தியப் பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் வர உள்ளது.
கரூரில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நவ.11-ல் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து மாலையில் காந்திகிராமப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என தெரியவந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், செய்து வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது வரை வெளியாகவில்லை.