தமிழகம்

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூ விற்ற பெண்ணை அகற்றிய ஊழியர்கள்: வைரலாக பரவிய வீடியோ

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: கோயில் வாசலில் பூ விற்பனை செய்த பெண்ணை, கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றிய வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தூத்துக்குடி சிவன் கோயிலுக்குள் பூக்கடை நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் மாதம் ஏலம் விடப்பட்டது. இதில் ரூ. 9.05 லட்சத்துக்கு பூக்கடை ஏலம் போனது. இதையடுத்து கோயில் வாசலில் வைத்து வேறு யாரும் பூ விற்பனை செய்யக்கூடாது என,கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர் கோயில் வாசல் அருகேதனது ஸ்கூட்டரில் வைத்து பூ விற்பனை செய்து வந்தார். ‘இங்குவைத்து பூ விற்பனை செய்யக்கூடாது’ என, பேச்சியம்மாளிடம் கடந்த 1-ம் தேதி கோயில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி மற்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சியம்மாளின் ஸ்கூட்டரைகோயில் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். இழுபறியில் ஸ்கூட்டரில் இருந்தபூக்கள் கீழே சிதறி விழுந்தன. இந்த வீடியோ காட்சி கடந்த சிலநாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேச்சியம்மாள் கூறும்போது, “கோயிலில் இருந்து சிறிது தொலைவில் பூக்கடை வைத்துள்ளேன். கடந்த 1-ம் தேதி கோயில் நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அங்கு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார் அவர்.

கோயில் ஊழியர்கள் கூறியதாவது: கோயிலுக்குள் பூக்கடைவைக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் ஒப்புதலோடு ஏலம் நடத்தப்பட்டது. இதில் ரூ. 9.05 லட்சத்துக்குஒருவர் ஏலம் எடுத்துள்ளார். கோயிலுக்குள் பூக்கடை ஏலம் விடப்பட்ட பிறகும் கோயில் வாசலில் வைத்து பேச்சியம்மாள் தொடர்ந்து பூ விற்பனை செய்ததால், ஏலம் எடுத்தவர் கடையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

இவ்வாறு வியாபாரம் பாதிக்கப்பட்டால் அடுத்த முறையாரும் கடையை ஏலம் எடுக்க மாட்டார்கள். கோயிலுக்கான வருமானம் பாதிக்கும். எனவே தான் கோயில் வாசலில் வைத்து பூ விற்பனை செய்ய வேண்டாம் என கூறினோம். ஆனால், பேச்சியம்மாள் தொடர்ந்து கோயில் வாசலில் வைத்துபூ விற்பனை செய்ததால் அவரது வண்டியை இழுத்து விட முயன்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT