காரைக்கால்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை அகற்றிய, காரைக்கால் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து, பாஜகவினர் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள பலர் கலந்து கொண்டனர்.
இதில் கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் எம்.அருள்முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: ''காரைக்கால் நேரு மார்க்கெட் புதிய வளாகத்தில் கடைகள் முறையாக வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பதுங்கிக் கொண்டது. சரியாக வேலையே செய்வதில்லை. உங்களுக்கு சம்பளம் ஒரு கேடா? ஊதியம் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறீர்கள். எப்படியாவது போங்கள். இனி உங்களுக்கு பாஜக எந்த ஆதரவும் கொடுக்காது.
காரைக்காலில் கழிவுநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. கேபிள் டிவி வரி பாக்கிய வசூல் செய்ய தைரியம் இல்லை. இதேபோல எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டியதுதானே? புதுச்சேரியில் இதேபோல வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று அகற்றிப் பாருங்கள். வீடுகட்ட அனுமதி பெறும் மக்களை அலைகழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறீர்கள். லஞ்சம் பெறும் செயல்கள் நடைபெறுகின்றன. அதிகாரிகள் முறைகேடாக செயல்பட்டால் கைது செய்வோம் என சட்டப்பேரவைத் தலைவர் கூறியுள்ளார். அதிகாரிகளை குறை சொன்னார் என்பதற்காக, அவருக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்துள்ளனர். பேனரை கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும். நகராட்சி ஆணையரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'' என காட்டமாகப் பேசினார்.
போராட்டம் குறித்து துரை சேனாதிபதி கூறியது: ''புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்துக்கு வரும் நவ.11-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்களிடம் எதுவும் கூறாமல், நகராட்சி ஊழியர்கள், சபாநாயகரை அவமதிக்கும் வகையில் நேற்று (நவ.7) பேனரை தாறுமாறாகக் கிழித்து அகற்றியுள்ளனர். நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் பேனர்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அகற்றாமல், இந்த பேனரை மட்டும் உள் நோக்கத்துடன் அகற்றியுள்ளனர். அரசு ஊழியர்கள் சரிவர பணியாற்றுவதில்லை, அவர்கள் முறையாகப் பணியாற்ற வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் விமர்சித்திருந்த நிலையில், வேண்டுமென்றே அவரை அவமதிக்கும் வகையில் பேனரை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது'' என்றார்.