நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பேசுகிறார் கமல்ஹாசன். படங்கள்: பு.க.பிரவீன் 
தமிழகம்

பிற மொழிகளை கற்றுக்கொண்டால்தான் தமிழின் அருமை அனைவருக்கும் புரியும்: கமல்ஹாசன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: பிற மொழிகளை கற்றுக்கொண்டால்தான் தமிழின் அருமை புரியும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது68-வது பிறந்தநாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சிஅலுவலகத்தில் நேற்று கொண்டாடினார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு 68 மணி நேரம் தொடர்ந்து நடக்கும் மருத்துவ முகாமை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

பின்னர் சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள், கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது: எனக்கு அரசியல் என்பது கடமை. எத்தனை தோல்விகள் வந்தாலும், நாம் துவளாமல் இருப்பதற்கு காரணம், நமது கொள்கையில் பற்றாக இருக்கிறோம். இந்தியாவில் இருந்து தமிழகம் என்ற தீவை நாம் பாதுகாக்க வேண்டும்.

Caption

நான் இந்தி ஒழிக என்று கூறவில்லை. தமிழ் வாழ்க என்றுதான் சொல்கிறேன். அனைவரும் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு தமிழ் மொழியின் அருமையை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் விரைவில் பத்திரிகை தொடங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. சாதியைப் பற்றி பேசுவதை, சாதியை தூக்கிப் பிடிப்பதை அனைவரும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசனுக்கு முதல்வர், திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறன்’ என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT