அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியைக் கொண்டு சமைத்த சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 100 மூட்டை(2,500 கிலோ) அரிசியைக் கொண்டு சமைக்கப்பட்ட சாதத்தால் அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த அபிஷேகம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து, பலவிதமான பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அபிஷேகம் செய்த அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.மீதமுள்ள சாதம், அருகில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக தரப்பட்டது.
தஞ்சாவூர் பெரியகோயிலில்.... இதேபோல, தஞ்சாவூர் பெரியகோயிலில் 1,000 கிலோ அரிசியைக் கொண்டு சமைக்கப்பட்ட சாதம், 13 அடி உயரமுள்ள பெருவுடையாருக்கு சாற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. 500 கிலோ காய்கறிகள், பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.