சென்னை: விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்து விட்டு, பின்னர் வரன்முறை செய்வதற்கு பதிலாக நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தையே திரும்பப் பெறலாமே என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைவாங்கியுள்ளேன். ஆனால், அந்தகுடியிருப்பில் மூன்றாவது தளத்துக்கு எந்தவொரு திட்ட அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவேவிசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர், மாநகராட்சி ஆணையர்நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். ஆனால், மழை, வெள்ளநிவாரணப் பணிகளை ஆணையர்மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தால் போதும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
உள்நோக்கம் இல்லை: இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்ததால் மனுதாரருக்கு சொந்தமான தரைத்தளம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி அதற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சீலை அகற்றிவிட்டு, மனுதாரரின் வீட்டுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும்பாதுகாப்பு வழங்கிய போலீஸார் யார், யார் என்பது குறித்து பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மாநகராட்சி ஆணையரையே ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதால்தான் அந்த கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுவது தவறு. குடியிருப்புக்காக அனுமதி பெற்றுவிட்டு, வணிக ரீதியாக செயல்பட்டு வந்த அந்த தரைத்தளத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.
மேலும், சீல் வைக்க மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் மகாதேவன், சுரேஷ்குமார், பாலாஜி ஆகியோர் தலைமையில் 13 மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கோட்டூர்புரம் காவல்ஆய்வாளர் விஜயன், 3 சார்பு - ஆய்வாளர்கள், 12 ஆயுதப்படை போலீஸ்காரர்கள் அங்கு சென்றிருந்தனர்’ என குறிப்பிட்டிருந்தார்.
அனுமதியில்லா 200 வீடுகள்: அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘‘விதிமீறலில் ஈடுபடும் எல்லா கட்டிடங்களையும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா? கிரீன்வேஸ் சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் எந்த அனுமதியுமின்றி 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகள் அங்கு ஆய்வுக்கு சென்றார்களா அல்லதுஅந்த இடமாவது எங்கு இருக்கிறது என தெரியுமா? அங்கு குடியிருப்பவர்களுக்கு அடையாற்றின் ஓரமாக சாலை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்துவிட்டு, பின்னர் அதை வரன்முறை செய்வதற்கு பதிலாக நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தையே திரும்பப் பெறலாமே. தமிழகத்தில் அதிகாரிகள் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகின்றனர் என்பதற்காகத்தான் இதையெல்லாம் கூறுகிறோம். சட்டமே தேவையில்லை என்றால் சிஎம்டிஏ, மாநகராட்சி, ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் எதற்கு’’ என கருத்து தெரிவித்தனர். இறுதியாக, மனுதாரர் தனது வீட்டில் உள்ள விதிமீறல்களை 15 நாட்களுக்குள் சரிசெய்ய வேண்டும், எனக்கூறி விசாரணையை நவ.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.