விவசாயிகளுக்கான திட்டத்தை இலாகா இல்லாத முதல்வர் ஜெயலலிதா எப்படி அறிவித்தார் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவு இயக்கமே அடியோடு முடங்கியுள்ளது. இந்நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.
அக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் எவ்வித சிரமும் இன்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா நவ.22-ம் தேதி முன்னோடி திட்டம் ஒன்றை அறிவித்தார் எனக் கூறியுள்ளார். இது துறை செயலாளர்கள், அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதற்கு தமிழக அரசின் இந்த ஏற்பாடு ஏதாவது ஒரு வகையில் உதவும் என்றால் அதனை வரவேற்பதில் எனக்கு எவ்வித தயக்கும் இல்லை. முழுமனதோடு வரவேற்கிறேன். ஏனென்றால் 4 ஆயிரத்து 490-க்கும் அதிகமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளன. இதனை சுட்டிக்காட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த 16-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
ஆனால், இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழக அரசை யார் நடத்துகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக தேக்க நிலை குறித்து திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பின. அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசு நிர்வாகத்தை கவனிக்கிறார்களா என கேள்விகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தையும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகிப்பார். ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என கடந்த அக்டோபர் 11-ம் தேதி ஆளுநர் உத்தரவிட்டார்.
அதன்பிறகு இன்று வரை முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிர்வாக ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவே எந்த மறுஉத்தரவையும் ஆளுநர் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கான திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா எப்படி அறிவித்தார்? அதற்கான கோப்புகள் எந்த விதியின் கீழ் அவருக்கு அனுப்பப்பட்டது? சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அல்லது செயலாளர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத முதல்வருக்கு அனுப்பி வைத்தார்கள் என்பது போன்ற சட்ட கேள்விகள் எழுகின்றன.
அக்டோபர் 11-ம் தேதி ஆளுநர் பிறப்பித்த உத்தரவு மாற்றப்படவில்லை என்றால் நவ. 22-ம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு அரசின் நிர்வாக விதிகளுக்கு முரணானதாகும். அதுமட்டுமின்றி ஆளுநர் ஏற்படுத்திய நிர்வாக நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டு, சட்ட அங்கீகாரம் இல்லாத நிர்வாகம் திரை மறைவில் நடைபெற்று வருவதை வெளிப்படுத்துகிறது. இது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.
எனவே, இந்தப் பிரச்சினையில் ஆளுநர் தலையிட்டு முதல்வரின் அறிவிப்பு குறித்து கூட்டுறவு அமைச்சரின் ஆய்வுக் கூட்டம் பற்றியும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநில அரசு நிர்வாகம் சட்டப்படி நடைபெறுகிறதா என்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.