சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு 
தமிழகம்

எதிர்வரும் மழையை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சமாளிக்க தயார்: அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: "அடுத்த வரவிருக்கும் மழையை ஏற்கெனவே பெய்த மழையை சமாளித்ததுப் போல, மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சமாளிப்போம் என்ற நம்பிக்கையோடு தயார் நிலையில் இருக்கிறோம்" என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த 5 நாட்களில் 40 செ.மீட்டர் வரை மழையை எதிர்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் பருவமழை மீண்டும் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு மழையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நின்றதோ, அந்த இடங்களில் எல்லாம் 70 சதவீதம் அளவிற்கு மழைநீர் தேங்காதவாறு இந்தாண்டு நிவர்த்தி செய்திருக்கிறோம்.

இந்த பருவமழையின்போத, ஒருசில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதை கணக்கெடுத்துள்ளோம். அந்தப் பகுதிகளில் எல்லாம் மின்மோட்டார் வாயிலாக தண்ணீரை இறைத்துள்ளோம். அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார்களை அங்கேயே நிறுத்திவைக்குமாறு கூறியிருக்கிறோம்.

ஒருவேளை வரும் காலத்தில் அதிகமான மழை பெய்யுமானால், கூடுதலாக மின் மோட்டார்களைப் பொருத்தவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். அடுத்து வரவிருக்கும் மழையை ஏற்கெனவே பெய்த மழையை சமாளித்தது போல, மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சமாளிப்போம் என்ற நம்பிக்கையோடு தயார் நிலையில் இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT