முதல்வர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது.
இந்நிலையில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நம்முடைய முதல்வருக்கு தந்த சிகிச்சை நல்ல முறையில் பலன் அளித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக, இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். முதல்வர் பூரணமாக குணமடைந்து கோட்டையிலே வந்து கோப்புக்களை எல்லாம் பார்க்கக்கூடிய அளவுக்கு நல்ல நலம் பெற வேண்டும். நான் மனப்பூர்வமாக ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்’’ என்றார்.