சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 9,10-ம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் நவ.7,8-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில், தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் நவ.9, 10-ம் தேதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் நவ. 10-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 8 செ.மீ.,கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 5 செ.மீ., கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், காஞ்சிபுரம், கடலூரில் 4 செ.மீ. மழை பதிவானது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி,தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே,இப்பகுதிகளுக்கு நவ. 9, 10-ம்தேதிகளில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது