10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களின் மேற்படிப்புக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. முதலில் மாநில அளவிலும் அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். அந்த வகையில், முதல்கட்ட தேர்வான மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு, தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் 450 மையங்களில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். சென்னையில் சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல் நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி உள்ளிட்ட 27 தேர்வு மையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுத இருப்பதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்ட தேர்வான தேசியத் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். அதில் அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெறும் 2 ஆயிரம் பேர் தேர்வுசெய்யப்படுவர். அவர்களுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,250-ம் அதன்பிறகு இளங்கலை, முதுகலை படிப்புக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரமும் தொடர்ந்து பிஎச்டி படிப்புக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.