சென்னை: வீட்டின் இரும்பு கேட்டை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து முன்னாள்வருமான வரித் துறை அதிகாரி, அவரது மனைவி உயிரிழந்தனர். சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (78). ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அதிகாரி. இவரது மனைவி பானுமதி (76) தடயவியல் துறையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு வீட்டின் இரும்புகேட்டை மூடுவதற்காக முயன்றபோது. மின்சாரம் பாய்ந்ததால் அலறினார். மூர்த்தியை காப்பாற்றுவதற்காக பானுமதி அவரை இழுக்க முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, இருவரும் அங்கேயே சுருண்டு விழுந்தனர். சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் குடியிருக்கும் பிரசன்னா ஓடிவந்தார். அவர் மூர்த்தி, பானுமதி இருவரும் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததைக் கண்டு உடனடியாக் அசோக் நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடம் விரைந்து சென்ற போலீஸார் மின்சாரம் பாய்ந்து இறந்த மூர்த்தி, பானுமதி ஆகியோரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு கேட்டில், மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்திருந்தது தெரிந்தது. அதை அறியாமல் தொட்ட மூர்த்தி, அவரை காப்பாற்ற முயன்ற பானுமதி இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். வயதான தம்பதி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புரிதலுடன் வாழ்ந்த தம்பதி: மூர்த்தி - பானுமதி தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால், தங்களுக்கு வரும் ஓய்வூதியம் மற்றும் வீட்டு வாடகை ஆகியவற்றை ஏழை குழந்தைகள் சிலரின் கல்விக்காகச் செலவிட்டுள்ளனர். அவர்களால் படிக்க வைக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவராகி தற்போது கனடாவில் பணிபுரிகிறார். மேலும், பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த புரிதலுடன் இருந்துள்ளனர். கோயில் செல்வது உட்பட எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்லும் பழக்கத்தை வைத்திருந்துள்ளனர். அதுபோலவே இருவரும் ஒன்றாக இறைவனடி சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறி வருந்தினர்.
பலருக்கு கல்வி கற்க உதவியவர்கள்: உயிரிழந்த மூர்த்தியின் நண்பர் மகாதேவன் கூறும்போது, "20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி வசித்து வந்த குடியிருப்பில்தான் வசித்து வந்தேன். எனக்கு ஒரு மகள் உள்ளார். அவரை மூர்த்தி தம்பதிதான் படிக்க வைத்து மருத்துவராக்கினர். மேலும், 5 பேரை அவர்கள் தற்போதும் படிக்க வைத்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக வேறு இடத்தில் வசித்து வருகிறேன். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் நான்குடும்பத்துடன் மூர்த்தி வீட்டுக்குச் சென்றேன். இரவு 8.30 மணிக்கு மேல் அங்கிருந்து எனது வீட்டுக்குப் புறப்பட்டு சென்றுவிட்டேன். 'மழை பெய்கிறது. பத்திரமாக வீடு செல். வீட்டுக்குச் சென்ற பின்னர் மறக்காமல் எனக்கு போன் செய்' என்றார். அந்த அளவு கனிவு கொண்ட மூர்த்தி தற்போது இல்லை எனக் கூறி கலங்கினார்.