சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க சாதி, மத மோதல் இல்லாமல் இருக்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார்" என்று கூறியுள்ளார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 66 வேல்முருகன் நகரில் தொடரும் பெரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க கட்டணமில்லா மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தொடங்கி வைத்தனர்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நான்கு வார்டுகளில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பொதுமக்களுக்கு பால் பழங்கள் பிரட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: "சென்னையில் கடந்தாண்டு மழையால் தத்தளிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீததிக்கும் மேல் இந்த ஆண்டு மழை நீர் தேங்கவில்லை.பெரு மழையின் பாதிப்பில் இருந்து காப்பாற்றிய முதல்வரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்றைய (நவ.5) மருத்துவ முகாமில் மட்டும் சென்னையில் 82,000 பேர் பயன் பெற்றுள்ளனர். அடுத்த மழைக்குள்ளாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வருகின்ற 9-ம் தேதி பெரு மழை வந்தால் மக்கள் பாதிக்காமல் இருக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவையான இடங்களில் மின் மோட்டார்களை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டேரி, கூவம் போன்ற இடங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
சென்னையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 2.5 லட்சம் மக்களுக்கு கொசுவலை வழங்கும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்றார். ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க சாதி மத மோதல் இல்லாமல் இருக்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார்" என்று அவர் கூறினார்.