சென்னை: தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்கக் கோரியோ, புதிதாக அங்கீகாரம் கோரியோ தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும்போது, அந்த பள்ளி கட்டிடத்துக்கான ஒப்புதல் சான்றை இணைக்க வேண்டும் அல்லது ஒப்புதல் கோரி அளித்துள்ள விண்ணப்பத்தை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சார்பிலும், அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, ‘‘அரசாணை 76-ன்படி, பள்ளி கட்டிடங்களுக்கு வரன்முறை தொடர்பான விண்ணப்பம் அளித்து, அதன் நகலை சமர்ப்பித்தால் மட்டுமே தொடர் அங்கீகாரம் வழங்கப்படும் என்ற நிபந்தனை 2011-ம் ஆண்டுக்கு முன்பாககட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு பொருந்தாது’’ என வாதிட்டார்.
‘‘தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ஏ அமலுக்கு வந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும்கட்டிட அனுமதியோ, திட்ட அனுமதியோபெறத் தேவையில்லை. ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு கூடுதல் கட்டிடங்களை கட்டியிருந்தால் அதற்கு திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்காக விண்ணப்பித்து இருக்க வேண்டும்’’ என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘‘கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க தேவையில்லை. அதேநேரம், கூடுதல் கட்டிடங்கள் கட்டியிருந்தால், அதற்குதிட்ட அனுமதி பெற வேண்டும் அல்லது விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கோரும் மனுக்களுடன் அதற்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும்.ஒருவேளை 2011-க்கு பிறகு பள்ளிகள் எந்தகட்டுமானமும் கட்டவில்லை என்றால், அதை தெரிவித்து பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கோரி விண்ணப்பிக்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.