ஆம்பூர்: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததால் கைதாகி சிறையில் உள்ள ஆம்பூர் கல்லூரி மாணவரின் வீட்டில் போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் மிர் அனாஸ் அலி. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இது தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய நுண்ணறிவு பிரிவினர் கடந்த ஜூலை 30-ம் தேதி நள்ளிரவு மிர் அனாஸ் அலியின் வீட்டினுள் அதிரடியாக நுழைந்து அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ் இயக்கத்துடன் மிர் அனாஸ் அலி டெலிகிராம் செயலி வழியாக தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மிர் அனாஸ் அலியை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஆம்பூரில் உள்ள அவரது வீட்டில் திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளுடன் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர்.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியது. அவரது வீட்டுக்கு அருகில் ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மிர் அனாஸ் அலி 90 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் வழக்கு தொடர்பாக வருவாய்த் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்.