திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக தேர்தல் பணியை மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் முன்னிலையிலேயே மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் பா.சரவணன் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். மனு தாக்கல் முடிந்து வெளியே வந்த வேட்பாளர் திமுக உறுதியாக வெற்றி பெறும் என பேட்டி அளி்த்தார்.
பின்னர் கட்சியினர் கரகோஷத்துக்கு இடையே காரில் ஏறி நிர்வாகிகள் புறப்படத் தயாராகினர். அப்போது திடீரென மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் ஆதரவாளரிடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் தள்ளுமுள்ளுவரை சென்றது. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையிலேயே நடந்த இச்சம்பவம் உற்சாகத்தில் இருந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவத்தின் பின்னணி குறித்து திமுக மாநில நிர்வாகி உள்ளிட்ட கட்சியினர் கூறியதாவது: திமுகவில் சமீபகாலமாக மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, தளபதி ஆகியோரிடையே ஒருவருக்கொருவர் குறை சொல்லும்போக்கு அதிகரித்து, விரோதமாக வளர்ந்து வருகிறது. திமுக வேட்பாளராக சரவணனை அறிவிக்க மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் பணம் பெற்றதாக எம்எல்ஏ ஒருவரிடம் தளபதி குற்றம் சாட்டி பேசியுள்ளார். இதைக் குறிப்பிட்ட அந்த எம்எல்ஏ ஐ.பெரியசாமியிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று மனு தாக்கல் முடிந்ததும், பெரியசாமி முன்னிலையில் தளபதியின் குற்றச்சாட்டு குறித்து மூர்த்தியிடம் குறிப்பிட்ட எம்எல்ஏ விசாரித்துள்ளார். இது மூர்த்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தளபதிக்கு வில்லாபுரம், அவனியாபுரம் பகுதிகளை உள்ளடக்கிய 61, 62-வது வார்டுகளில் தேர்தல் பணியாற்றுமாறு மணிமாறன் உத்தரவிட்டார். திருப்பரங்குன்றத்தில் 40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் தனக்கு வேறு பகுதியை மாற்றி தேர்தல் பணி வழங்கியது குறித்து அதிருப்தியடைந்தார் தளபதி. இதன் பின்னணியில் மூர்த்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தான் திருப்பரங்குன்றத்தில் மட்டுமே தேர்தல் பணியாற்றுவேன் என்றும், இதுகுறித்து கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பேன் என்றதுடன், அப்பகுதியில் பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறிய தளபதியின் செயல் மணிமாறன், மூர்த்தி ஆகியோருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த அக்.30-ல் ஸ்டாலின் பங்கேற்ற செயல்வீரர் கூட்டத்திற்கு கட்சியினர் ஏராளமானோரை திரட்டியதையும் தளபதியால் ஏற்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று மனுத் தாக்கல் முடிந்ததும் தேர்தல் பணிக்காக ஒதுக்கிய வார்டுகளை மாற்றி வழங்குமாறு ஐ.பெரியசாமியிடம் தளபதி முறையிட்டார். அப்போது அருகிலிருந்த மூர்த்தி, ‘‘ஏதாவது சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாங்க, நீங்க புறப்படுங்க’’ என பெரியசாமியிடம் கூறியபடியே காருக்கு அழைத்து வந்தார்.
தனது கோரிக்கையை பெரியசாமி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தன்னை அவமரியாதை செய்யும் வகையில் மூர்த்தி நடந்து கொண்டதாகக் கருதி தளபதி கோபமடைந்தார். இதை கவனித்த தளபதியின் ஆதரவாளர் ஒருவர் பெரியசாமியை நோக்கி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூர்த்தி, கடுமையாக திட்டினார். அவருக்கு ஆதரவாக மணிமாறன், அவனியாபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் தளபதியின் ஆதரவாளரை நோக்கி பாய, மோதலை தவிர்க்க கட்சியினர் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே கூச்சலும், குழப்பமுமாக பரபரப்பான சூழல் நிலவியது.
பெரியசாமியை அங்கிருந்து உடனே புறப்படும்படி போலீஸார் அறிவுறுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்களும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தைகவனித்த திமுக தொண்டர் ஒருவர் கூறுகையில், ‘இருவருக்குமிடையே உள்ள பிரச்சினையை தெருவிலா விவாதிப் பார்கள். தேர்தல் பணியில் தீவிரம் காட்ட வேண்டிய நேரத்தில், இப்படி கட்சியினருக்குள்ளேயே மோதல் நடப்பது தேர்தல் பணியை பாதிக்கும் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லையே. இப்பிரச்சினைக்கு ஸ்டாலின் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றார்.