தமிழகம்

சென்னையில் மழை இல்லாததால் வடிகால்களில் அடைப்பை நீக்க உத்தரவு: மழைநீர், கழிவுநீர் அகற்றும் பணியில் 501 வாகனங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கனமழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், மழைநீர் வடிகால், வண்டல் வடிகட்டி தொட்டி அடைப்புகளை நீக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னையில் 501 கழிவுநீர் இயந்திர வாகனங்கள் மூலம் மழைநீர், கழிவுநீர் அகற்றப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் தற்சமயம் மழைப் பொழிவு இல்லாத நிலையில், கடந்த 4 நாட்களில் பெய்த மழையால் சாலைகள், தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகள், மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை உடனே அகற்றும் பணியை தொடங்குமாறு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது, மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ள இடங்களில் முடிக்கப்படாத வண்டல் வடிகட்டி தொட்டிகளை உடனே அமைக்க வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்ட வண்டல் வடிகட்டி தொட்டிகளில் சேர்ந்துள்ள வண்டல்களை அகற்ற வேண்டும்.

வண்டல் வடிகட்டிதொட்டி, மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் குழாய் பொருத்தப்படாத இடங்களில் குழாய் பொருத்தவோ, தற்காலிக ஏற்பாடாக துளையிடவோ ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட வேண்டும். வண்டல் வடிகட்டி தொட்டிகளில் உள்ள திடக்கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியின் சாலை பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

சாலைகளில் மழையால் ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனே சரிசெய்ய மாநகராட்சி பேருந்து சாலைகள் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள், தெருக்களில் தேங்கிய திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை துறையினர் அகற்ற வேண்டும். பருவமழையால் ஒருசில இடங்களில் முடிக்கப்படாமல் நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் இணைப்புபணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிநீர் வாரியம்: இதனிடையே, சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு உட்பட்ட15 மண்டலங்களில் பேரிடர் கால நிவாரண பணிகள் மேற்கொள்ளும் வகையில், 15 செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் அகற்றும் பணிகளில் 57 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதானகுழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய 162 ஜெட்ராடிங் இயந்திரங்கள், கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்து தூர்வாரும் பணி மேற்கொள்ள ஏதுவாக 282 தூர்வாரும் ஆட்டோக்கள் என மொத்தம் 501 கழிவுநீர் இயந்திர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரும் பராமரிப்பு பணிகள் கடந்த 3 மாதமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் 2,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

044-45674567 (20 இணைப்புகள்) என்ற தொலைபேசி எண், 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு, மழைநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

SCROLL FOR NEXT