தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களுக்கு இலவசமாக மூலிகை கஞ்சியை அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்படும் ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் தூத்துக்குடி கிளை சார்பில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
4 நாட்கள் விநியோகம்
வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நான்கு நாட்களும் இலவசமாக வழங்கப்படும் மூலிகை கஞ்சியை நோயாளிகள், அவர்களது உறவினர்கள் ஆர்வமுடன் வாங்கிக் குடிக்கின்றனர்.
தினமும் காலை 10 மணிக்கு மூலிகை கஞ்சி விநியோகம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேரம் விநியோகம் நடைபெறுகிறது. நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர்கள், கடை வைத்திருப்பவர்கள் என பலரும் வாங்கி குடிக்கின்றனர். தினமும் 650 பேருக்கு கஞ்சி விநியோகிக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
மூலிகை கஞ்சி விநியோகத்தை முன்னின்று நடத்தி வரும் பொறியாளர் வி.ஏ.பாஸ்கர் கூறியதாவது:
திருச்சி, துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் மூலிகை கஞ்சி வழங்கி வருகிறோம். இந்த மூலிகை கஞ்சியை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் தீவிரம் குறையும். சளி, இருமல் போன்ற நோய்கள் கட்டுப்படும்.
பொன்னி பச்சரிசியுடன் சின்ன வெங்காயம், பூடு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், திப்பிலி ஆகிய 9 மூலிகைகள் சேர்த்து வேகவைத்து இந்த கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
நோயாளிகளுக்கு இந்த மூலிகை கஞ்சி பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தான் அரசு மருத்துவமனை வாசலை தேர்வு செய்தோம். வாரத்தில் நான்கு நாட்கள் வழங்குகிறோம். தினமும் காலை 10 மணி முதல் விநியோகம் செய்கிறோம். தினமும் 650 பேருக்கு வழங்கப்படுகிறது.
7 நாள் வழங்க முயற்சி
மருத்துவமனையில் உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உறவினர்கள் பாத்திரங்களில் வாங்கிச் செல்கின்றனர். அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.முருகன், ஆர்.சங்கர், சீனிவாசன் உள்ளிட்டோர் குழுவாக இணைந்து இந்த கஞ்சியை வழங்கி வருகிறோம். இதற்கான செலவை பகிர்ந்து கொள்கிறோம். மேலும், நன்கொடையாளர்களிடமும் நிதி உதவி பெறுகிறோம். நாங்களே நேரடியாக வந்து கஞ்சி விநியோகிக்கிறோம். வாரத்தில் 7 நாட்களும் வழங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம் என்றார் அவர்.
நல்ல வரவேற்பு
கடந்த சில நாட்களாக கஞ்சி விநியோகம் பணியில் உதவிசெய்து வரும் ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.வெள்ளப்பாண்டி கூறும்போது, ‘இந்த மூலிகை கஞ்சி மிகவும் சுவையாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது. நோயாளிகள், உறவினர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆர்வமுடன் வாங்கி குடிக்கின்றனர். அண்மையில் தான் இந்த சேவையை அறிந்தேன். நானும் தினமும் வந்து என்னால் முயன்ற உதவியை செய்து வருகிறேன். வாரத்தில் ஒரு நாள் கஞ்சி வழங்க நிதியுதவியும் அளிக்கிறேன்’ என்றார் அவர்.