திருச்சி: புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் கூறியது தவறான தகவல் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிக் கல்வித் துறை சார்பில்ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்காக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடைபெறும் அதே வேளையில், ஏழை மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை அளிப்பதை கடமையாக கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவை தமிழகத்துக்கு தேவையில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர்மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வழங்கியுள்ளார். ஆனால், அண்மையில் திருச்சிக்கு வந்த மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்,இதை சரியாக புரிந்து கொள்ளாமல், புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தவறாக தெரிவித்துள்ளார்.
திருச்சி பால்பண்ணை- துவாக்குடி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். உயர் மேம்பாலம் அமைக்கலாம் என்ற கருத்தும் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஓரிருநாளில் மீண்டும் அதிகாரிகள் நிலையிலான கூட்டம் நடைபெறவுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மழைக் காலத்தில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எவ்வாறு கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நேற்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.