தமிழகம்

அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு: பாஜகவினர் முன்ஜாமீன் நிபந்தனை மாற்றம்

செய்திப்பிரிவு

மதுரை: நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன் ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இவர்கள் சேலத்தில் தங்கி சேலம் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இந்த ஜாமீன் நிபந்தனையை மாற்றி அமைக்கக் கோரி 3 பேரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிபதி நக்கீரன் விசாரித்தார். மனுதாரர்கள் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ். குமார் ஆஜரானார். பின்னர், மனுதாரர்கள் 3 பேரும் சேலத்தில் தங்கி இருந்து மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவை மாற்றி வாடிப்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT