தேனி: ஆளுநரை மாற்றும்படி கோருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். தேனியில் அவர் செய்தி யாளர்களிடம்கூறியதாவது: நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழக காவல்துறை தந்திரமாகச் செயல்பட்டு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து திருமா வளவன், சீமான் போன்றோர் பேசுகின்றனர். இவர்கள் பிரிவினைவாதிகள், தீயசக்திகள்.
கூட்டணி தொடரும்: அதிமுகவுடன் பாஜக கூட்டணி தற்போதும் தொடர்கிறது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை நாங்கள் கைது செய்யவில்லை, மத்திய அரசுதான் கைது செய்தது என்று சொல்லிக் கொள்வதற்காக முதல்வர் என்.ஐ.ஏ விசாரணை கோரி இருக்கிறார். அதனால் என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கை ஒப்படைக்க முதல்வர் கூறியுள்ளது ஒரு நாடகம். பல தீவிரவாத வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்த என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிப்பதால் நடவடிக்கைகள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு.
அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்வதெல்லாம் கோமாளித்தனம். அதற்கு அதிகாரமும் கிடையாது. ஆளுநரை மாற்றும்படி கோருவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை திமுக நிறுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.