மழைக்கால மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 
தமிழகம்

மழைநீர் வடிகால் பணிகளில் கடந்த ஆட்சியாளர்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகளில் கடந்த ஆட்சியாளர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் இன்று (நவ. 4) தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "சென்னையில் நேற்று மாலை பெய்த மழையால் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெறும் இடங்களில் மழை நீர் தேங்கியது. அந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்ததும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும்.

கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. முறையாக தூர் வாரியிருந்தால் கடந்தாண்டு மழைநீர் தேங்கியிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதி ஒதுக்கி 1000 கி.மீ தூரம் மழை நீர்வடிகால்வாய் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. தென்சென்னை, மத்திய சென்னை பகுதியில் மழைநீர் எங்கும் தேங்கவில்லை. வடசென்னையின் பல பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதால் தண்ணீர் தேங்கியது. அதனை உடனே அகற்றுவதற்கான பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயகுமார் போகின்ற கன்னித்தீவு வேறு. அவர் சொல்லும் கன்னித்தீவு இது இல்லை. முதலமைச்சர் தினமும் தொகுதியை கண்காணித்து வருகிறார். எல்லாவற்றிலும் தோல்வியுற்று, என்ன செய்வது என்று தெரியாமல் தனது இருப்பை காண்பிக்கவே ஜெயக்குமார் பேசிவருகிறார்.

அதிமுக ஆட்சியில் திட்டம் போட்டு செய்கிறோம் என சொன்னார்கள். ஆனால், திமுக நிதி ஒதுக்கி செய்து காண்பித்துள்ளது. அவர்கள் சொன்னார்கள், நாங்கள் செய்தோம். கடந்த ஆட்சி காலத்தில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் உரியவர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT