மயிலாடுதுறை/ தஞ்சாவூர்/ திருவாரூர்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை நேற்றும் தொடர்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம்இரவு முதல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதில், நேற்றுகாலை நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 220 மி.மீ மழைபதிவாகியுள்ளது.
மேலும், கொள்ளிடத்தில் 162 மி.மீ, தரங்கம்பாடியில் 89 மி.மீ,மணல்மேட்டில் 82 மி.மீ, மயிலாடுதுறையில் 27 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, நேற்று பரவலாக கனமழை பெய்தது. இந்த கன மழை காரணமாக, மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சீர்காழி அருகே தென்பாதி பகுதியில் ரவி என்பவரின் வீட்டில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
பூம்புகார் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியில், நள்ளிரவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பின்னர், நேற்று காலை வடிகால் சீரமைக்கப்பட்டதால், தண்ணீர் வடியத் தொடங்கியது. செம்பனார் கோவில் காவல் நிலைய வளாகத்திலிருந்த பழமையான மரம் வேருடன் சாய்ந்தது.
சீர்காழி அருகேயுள்ள மண்ணியாறு, மணிக்கரணையாறுகளின் கரைகளைத் தாண்டி தண்ணீர் வழிந்தோடி பூம்புகார், பெருந்தோட்டம், அகரப் பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், நாயக்கர்குப்பம், திருவாலி, மணல்மேடு, நிம்மேலி, புதுத்துறை, குரவலூர், நெப்பத்தூர், திருநகரி, மங்கைமடம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், சில பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்படாததே தண்ணீர் வடியாமல் இருப்பதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சீர்காழி நகரப் பகுதியில் வசந்தம் நகர், பாலசுப்ரமணியன் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட புங்கனூர் சாலையை மூழ்கடித்து மழைநீர் ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், அடியக்கமங்கலம், விளமல், கங்களாஞ்சேரி, மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.
இந்த மழை தற்போது நடைபெற்று வரும் குறுவை அறுவடைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், சம்பா சாகுபடி பயிர்களுக்கு நல்ல பயனைத் தரும் என்றாலும், தொடர்ச்சியாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் சம்பா பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.