உதகை: உதகை அருகே ஹெச்.பி.எஃப். பகுதியில் பகல் நேரத்திலேயே பசு மாட்டை புலி வேட்டையாடியது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலை ஹெச்.பி.எஃப். இந்து நகர் பகுதியில் நேற்று காலை உறுமியவாறு புலி சுற்றிக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த மக்கள், தொலைவில் இருந்தவாறு புலியை வீடியோ எடுத்தனர். அப்போதுதான், அந்த பகுதியில் இருந்த பசு மாட்டை வேட்டையாடி புலி சுற்றித் திரிந்ததுதெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி நடமாடி வருகிறது. கடந்த ஜூலை 28-ம் தேதி வளர்ப்பு எருமையை வன விலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றது. அதன்பேரில், அங்கு சென்று வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அந்த எருமையை புலி தாக்கியது உறுதியானது.
ஆனாலும், இதுவரை புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை" என்ற னர். இந்நிலையில், பசு மாடுஉயிரிழந்துகிடந்த இடத்தில் வனச்சரகர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
வனச்சரகர் ரமேஷ் கூறும்போது, "புலி சுற்றித்திரிந்த பகுதி காப்புக் காடு. அப்பகுதியில் மாடு சடலமாக கிடந்தது. புலி தாக்கிதான் உயிரிழந்ததா என்பது, பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர்தான் தெரியவரும். மேலும், புலி நடமாட்டம் குறித்து மக்களுக்குவிழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.
புலியை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அங்கு கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்படும்" என்றார். பசு மாட்டின் அருகே புலி சுற்றித்திரிந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உதகை-கூடலூர் சாலை ஹெச்.பி.எஃப். இந்து நகர் பகுதியில் பசு மாட்டை வேட்டையாடி அமர்ந்திருந்த புலி.