தமிழகம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய திமுக தலைவரின் கணவரால் ஊழியர் தாக்கப்பட்டதாக புகார்: ஊழியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரை ஒன்றியத் தலைவரின் கணவர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து பணியை புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி பராமரிப்புப் பணி, புதிய சமையல் அறை, 15-வது நிதிக்குழு மானிய நிதி தொடர்பான பணிகள் என ரூ.80 லட்சம் மதிப்பிலான 26 பணிகளுக்கு இன்று (நவ. 4) ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று அலு வலகத்தில் உதவியாளர் செல்வ ராஜ் ஒப்பந்த விண்ணப்பப் படிவம், சலான்களை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் (திமுக) மஞ்சுளாவின் கணவர் பாலச்சந்தர், உதவியாளரிடம் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் விண்ணப்பப் படிவம் யார் கொடுக்க சொன்னது? குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதற்கு உதவியாளர் செல்வராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த பாலச்சந்தர், செல்வராஜிடமிருந்த விண்ணப்பப் படிவங்களை பறித்து கிழித்ததோடு, அவரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரம் அனைவருக்கும் ஒப்பந்தப் படிவம் தர வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன்சுந்தரம், ஊழியர்களை சமரசப்படுத்தி ஒப்பந்தப் படிவம் கொடுக்க நட வடிக்கை எடுத்தார். அதன் பின்பு இச்சம்பவத்தைக் கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஒன்றியத் தலைவரின் கணவர் பாலச்சந்தர் கூறியதாவது: ஒன்றியத் தலைவர் பெண் என்றும் பாராமல் ஊழியர்கள் தரக்குறைவாக பேசுகின்றனர். இதனால் நான் தலைவரின் பாதுகாப்புக்காக எப்போதும் வருவதுவழக்கம். அதன்படி நான் வந்தபோது அலுவலக நேரத்துக்கு முன்னதாக ஒப்பந்தப் படிவங்களை கொடுத்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தட்டிக் கேட்டேன். ஆனால் நான் யாரையும் தாக்கவில்லை என்று கூறினார்.

SCROLL FOR NEXT