தமிழகம்

கட்டுமானப் பணியில் ஈடுபடுவோரை அங்கேயே தங்கவைக்கக் கூடாது: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கோரிக்கை

செய்திப்பிரிவு

கட்டுமானப் பணியில் ஈடுபடுவோரை அங்கேயே தங்கவைக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசியதாவது:-

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் அங்கேயே தங்கியதால் இடிபாடுகளில் சிக்கினார்கள். எனவே, அடுக்குமாடிக் கட்டிடப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், அந்த கட்டிடம் கட்டப்படும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் டென்ட் அமைத்து தங்கவைக்கப்படவேண்டும்.

அப்படி செய்தால் விபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். மேலும், தொழிலாளர் நலத்துறையின் பறக்கும் படையினரை அனுப்பி அவ்வப்போது சோதனையிடவேண்டும். அப்போதுதான் எந்த நேரத்திலும் அதிகாரிகள் வருவார்கள் என்ற பயத்தில் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மோகன், “அதுபோன்ற பறக்கும் படை குழுக்கள், மற்ற மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. சென்னையிலும் அதுபோன்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.

SCROLL FOR NEXT