தமிழகம்

ஆளுநருக்கு சொந்தக் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது - ஆளுநர் தமிழிசை

அ.முன்னடியான்

புதுச்சேரி: டெல்லி நேரு யுவகேந்திரா சார்பில் காலாப்பட்டு, புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவை மையத்தில் நடைபெற்ற “அரசு சாரா அமைப்பு மேலாண்மை-ஆதாரம் மேம்பாடு” குறித்த மாநில அளவிலான கருத்தரங்கினை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘புதுச்சேரியில் கடல்சார் உயிரினங்கள் காட்சியகம் அமைக்கவும், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வந்து பார்க்கும் அளவுக்கு கடற்கரை மேலாண்மை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் ரூ.50 முதல் 60 கோடி வரை கடல் மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அப்படி வரும்போது புதுச்சேரியில் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு மீனவர்கள் இன்னும் அதிக பாதுகாப்பாக இருப்பார்கள்.

இத்தகைய திட்டங்களை நாம் முன்னெடுத்து செல்கிறோம். மத்திய அரசு நமக்கு போதிய உதவிகளை செய்து வருகிறது. மத்திய கடல்சார் அமைச்சக குழுவினர் முதல்வரையும் சந்தித்தார்கள். என்னையும் சந்தித்தார்கள். இதன்மூலம் கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தலாம்.’’ என்றார்.

அப்போது, மத்திய அரசு, அரசு சாரா அமைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காக ஒழுக்கப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா அமைப்புகள் பெருந்தொற்று நேரத்தில் ஆற்றிய சேவையின் பங்கை பாரத பிரதமர் நேரடியாக பாராட்டினார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பூசி கொண்டுவருவதில் அவர்களுடைய பங்கு முக்கியமானதாக இருந்தது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.

டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சரைப் பார்த்தேன். புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்த திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மத்திய அமைச்சரிடம் நீண்ட விவாதம் நடத்தினேன். ஆரம்ப சுகாதார நிறுவனங்களும் மேம்படுத்த வேண்டும், ரூ.1 கோடி செலவில் 100 படுகைகள் கொண்ட போதை மறுவாழ்வு மையம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறேன்.

அது மட்டுமல்ல மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்தினால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யலாம். அதற்கும் கோரிக்கை வைத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் வழி மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். நல்ல விவாதம் நடைபெற்றது. அதன் மூலம் புதுச்சேரி மக்கள் நிச்சயமாக பயன்பெறுவார்கள்.’’ என்று தெரிவித்தா்.

அதேபோல், தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் கோரிக்கையை சில அரசியல் கட்சிகள் வைப்பது குறித்த கேள்விக்கு, ‘‘இது தேவையில்லாதது என்று நினைக்கிறேன். ஆளுநருக்கு அவரின் சொந்தக் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. அவருடைய கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதிர்கருத்து சொல்லலாம். ஒரு கருத்தை சொல்லிவிட்டார் என்பதற்காகவே ஒரு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பவரை அவமதிப்பது. இது சரியல்ல என்பது என் கருத்து. கருத்து சுதந்திரம் சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் இருக்கிறது.’’ என்றார்.

SCROLL FOR NEXT