ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழகம்

ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா:  முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடந்த மணிப்பூர் ஆளுநரும், மேற்குவங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் இல்ல விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்குவங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், நடிகர் ரஜினிகாந்த், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

செண்டை வாசித்த தீதி: சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த சதாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றே சென்னை வந்திருந்தார். பின்னர், தமிழக முதல்வரை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இன்று காலை, விழா நடந்த இடத்திற்கு மம்தா பானர்ஜி வருகை தந்திருந்தார். அப்போது, விழாவிற்கு வருபவர்களை வரவேற்பதற்காக நுழைவு வாயிலில் கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதனைப் பார்த்த மம்தா பானர்ஜி, செண்டை மேளக் கலைஞர்களுடன் சேர்ந்து அந்த மேளத்தை இசைத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

SCROLL FOR NEXT