சென்னை: எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு, முன்பைவிட வேகத்துடன் மக்கள் பணியை தொடர்வோம் என பாஜக மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார். அக்.30-ம் தேதி நடைபெற்ற பசும்பொன் தேவர் குருபூஜைக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருந்தாகவும், மாநில அரசு பிரதமரின் வருகையின்போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தால் இந்த வருடம் பிரதமர் வருவது தள்ளிப்போனதாகவும் தகவல் என பாஜக மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், கடந்த மாதம் 13-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
உண்மைக்குப் புறம்பான இதுபோன்ற தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக அவர் மீதுபுகார் அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதால் நேரில் ஆஜராக வேண்டும் என போலீஸார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் நேற்று காலை அவர் ஆஜரானார். அவரிடம் சைபர் க்ரைம் போலீஸார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாவது: பிரதமர் வருகை பாதுகாப்பு தொடர்பாக நான் ட்விட்டரில் பதிவிட்டது உண்மையான தகவல். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதன் உண்மைத் தன்மை குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரணையின்போது தெரிவித்துள்ளேன். இதற்கு முன்னர் பொங்கல் தொகுப்பு தொடர்பாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போதும் இதேபோல விளக்கம் கொடுத்தேன். சில வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழல் தொடர்பாக பேட்டி கொடுத்துள்ளேன். அதன் அழுத்தமாகவேஎன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் மதுபானம் பிளாக்கில் விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கரூர் கம்பெனி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தனியார் நபர்கள் வசூல் செய்கின்றனர். நாங்கள் பதிவு செய்து குற்றச்சாட்டை கூறுவதோடு மட்டும் அல்லாமல், வழக்காகவும் தொடுக்க உள்ளோம். அதன்படி, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது சிபிஐ, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளோம். ஜல்சக்தி திட்டத்தை அமல்படுத்துவதிலும் தமிழகத்தில் அதிக அளவில் ஊழல் நடக்கிறது. இதில் தொடர்புடைய அமைச்சர், தமிழகத்தில் 22 கலெக்ஷன் பாய்ன்ட் வைத்துள்ளார். அதன்மூலம் பணம் வசூல் செய்கின்றனர். திமுகவினரின் மிரட்டலுக்கு நாங்கள் பணியமாட்டோம். பணம் சம்பாதிக்க நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கான பணிக்காகவே வந்துள்ளோம். எத்தனை பொய் வழக்குகள் பதிவு செய்தாலும் அதை சட்டபூர்வமாக எதிர்கொண்டு, முன்பைவிட வேகத்துடன் மக்கள் பணியைத் தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.