சென்னை ஆவடி பி.வி.புரத்தை சேர்ந்தவர் கமலக் கண்ணன். இவரது மனைவி காமாட்சி, பிரசவத்துக்காக போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். செவ்வாய்க் கிழமை இவருக்கு குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை 5-வது தளத்தில் இருந்த சிறப்பு வார்டில் காமாட்சி அனுமதிக்கப்பட்டார். அப்போது டாக்டர் போல வந்த ஒருவர் காமாட்சியின் தாயாரை சீஃப் டாக்டர் அழைப்பதாக கூறி தரை தளத்திற்கு அழைத்து சென்றார்.
அவரை அங்கு உட்கார வைத்து விட்டு, மீண்டும் சிறப்பு வார்டுக்கு வந்த அந்த ஆசாமி காமாட்சியின் நரம்பில் ஒரு ஊசி போட்டுள்ளார். உடனே காமாட்சி மயக்க நிலைக்கு செல்ல, அவர் அணிந்திருந்த தாலி செயின் உட்பட 20 சவரன் நகைகளை கழற்றி எடுத்து கொண்டு தப்பி விட்டார்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கூற அவர்கள் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நகைகளை கொள்ளையடித்து விட்டு அந்த ஆசாமி ஓடி செல்வது தெளிவாக பதிவாகி இருந்தன. அவரை பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கு பணியில் இருக்கும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.