சென்னை: மழை நீர் பெருக்கத்தின் காரணமாக சென்னையில் உள்ள ரங்கராஜபுரம் மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் காலை 10 மணி நிலவரப்படி, மழைநீர் பெருக்கத்தின் காரணமாக ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக உள்ளதால் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதனுள் அனுமதிக்காமல், ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும் வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து உள்வரும் மாநகர பேருந்துகளும் பெரம்பூர் மற்றும் அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம், பெரம்பூர் பாலம் வழியாக செல்கிறது. வெளிச்செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில், ஓட்டேரி, ஜமாலியா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
அபிராமபுரம் 3-வது தெருவில், மழையால் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், வாகனங்கள் மெதுவாக செல்வதாகவும், சாலைகளில் எங்கும் பள்ளங்கள் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.