இன்று காலை நடந்த ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ககன்தீப்சிங் பேடி 
தமிழகம்

'சென்னையில் கடந்த ஆண்டைபோல் மழைநீர் தேக்கம் பாதிப்பு இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டைப்போல் மழைநீர் தேக்கம் பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று காலை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜமன்னார் சாலை , பி,டி. ராஜன் சாலை ராமசாமி சாலை, டபுள் டேங்க் ரோடு, ஆர்.கே சண்முகம் சாலை,அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் கடந்த ஆண்டைப்போல் மழைநீர் தேக்கம் பாதிப்பு இல்லை. இதற்குக் காரணம் சென்னையில் எங்கெல்லாம் மழை நீர் தேங்கும். அதை போக்கும் வழிவகைகள் என்ன என்பதைக் கண்டறிய முதல்வர் ஒரு குழு அமைத்து அறிக்கை பெற்று அதற்கேற்ப மழைநீர் வடிகால் பணிகளை முடுக்கிவிட்டதே ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 220 கி.மீ நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்கள் ரூ.710 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடிக்கும்படி ஒப்பந்தம் கோரப்பட்டது. இருப்பினும் முதல்வரின் நேரடி கண்காணிப்பு, ஆய்வின் காரணமாக 6 மாதங்களில் 157 கி.மீ பணிகள் முடிந்துள்ளன. இதனால் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது சென்னையில் 200 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் இந்த ஆண்டு 40 இடங்களில் மட்டுமே தேங்கியுள்ளது. அதுவும் 9 இடங்களில் மட்டுமே மோட்டார் வைத்து நீரே வெளியேற்றும் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு 1600 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 400 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மக்கள் இந்த மாற்றங்களை வரவேற்றுள்ளனர். மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த 36 மணி நேரத்தில் 15 செமீ முதல் 30 செமீ வரை மழை பெய்துள்ளது. இருந்தாலும் மழை பாதிப்பு கடந்த ஆண்டைவிட மிகமிக குறைவு என்பதை சுட்டிக்காட்டுகிறேன். ஓரிரு இடங்களில் மட்டுமே பாதிப்பு உள்ளது. சென்னையில் 16 சுரங்கப்பாதை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இந்த சுரங்கப்பாதைகள் அனைத்துமே ஓரிரண்டு நாட்கள் முடங்கியது. ஆனால் இன்று 16 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து முடக்கம் இல்லை. வடசென்னை கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் பாதிப்பு. உள்ளது.

கடந்த ஆண்டு சோழிங்கநல்லூர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இந்த ஆண்டு சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரியில் பாதிப்பு இல்லை. பிடி ராஜன் சாலையில் கடந்த ஆண்டு இடுப்பு அளவு தண்ணீர் இருந்தது இந்த ஆண்டு 2 இன்ச் தண்ணீர் தான் நிற்கிறது மேடவாக்கம் புழுதிவாக்கம் உள்ளகரம் பகுதிகளிலும் நீர் தேக்கம் இல்லை. அதேபோல், இந்த ஆண்டு மழைநீர் தேக்கம் பாதிப்பால் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் சூழல் ஏற்படவே இல்லை. பெரிய அளவில் மழை பொழிந்து குடிசைப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு பாதித்தால் மட்டுமே அவ்வாறாக முகாம்களில் தங்கவைப்போம். ஆனால் அதற்கான சூழல் உருவாகவில்லை. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சென்னையில் 200 வட்டங்களிலும் நடத்த உத்தரவிட்டுள்ளோம். ஒரே நாளில் 200 முகாம்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT