சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, தமிழக பாஜக நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நமீதா,கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார்.
இதையடுத்து, சைதை சாதிக்கை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக மகளிர் அணியினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சைதை சாதிக் பேசிய வீடியோவை பார்வையிட்டனர். இதில், அவர் வரம்பு மீறி பேசியதுஉறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.