சென்னை: பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக விமர்சித்த திமுக பேச்சாளரை கண்டித்தும், அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட 100-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை ஆர்.கே.நகரில் சிலநாட்களுக்கு முன்பு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், சென்னை தெற்கு தொகுதி மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளரும், திமுக பேச்சாளருமான சைதை சாதிக், தமிழக பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பாஜக மகளிர் அணி தலைவர் உமாரதி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: மனு கொடுக்க வரும் பெண்களின் தலையில் அடிப்பது, இலவசபேருந்து பயணத்தை ‘ஓசி பயணம்’என கூறுவது, மேடைப் பேச்சில் பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசுவது ஆகியவைதான் கடந்த 16 மாதங்களாக திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
போலீஸாரிடம் நேர்மை வேண்டும்: பெண்களை தவறாக பேசுவது, திமுகவினரின் ரத்தத்திலேயே இருக்கிறது. பெண்களை தவறாகபேசுபவர்களை கைது செய்யாமல், அதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதுதான் திராவிட மாடல்போல. பாஜக எப்போதும் சட்டத்தோடு இசைந்துபோகும் கட்சி. நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். ஆனால், சட்டம் தனது கடமையை தவறாக செய்கிறதே என்பதுதான் எங்கள் வருத்தம். போலீஸார் நேர்மையாக, நாணயமாக இருந்தால், பெண்களை இழிவாக பேசிய சைதை சாதிக்கைதான் கைது செய்திருக்க வேண்டும்.
பெண்களின் நம்பிக்கையை இழக்கும்போதே, ஓர் ஆட்சி தனதுஉயிரோட்டத்தை இழந்து விடுகிறது. தவறு செய்த தனது கட்சிக்காரர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், சாலையில் நடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்படும். எனவே, முதல்வர் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஆட்சியாக இருந்தால், பெண்களிடம் தவறாக நடந்தாலும், தவறாக பேசினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட ஆட்சியை பாஜக கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், பொதுச் செயலாளர் நதியா, சரஸ்வதி எம்எல்ஏ, மாநிலச் செயலாளர் பிரமிளா சம்பத் உட்பட மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட 100-க்கும்மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.