சென்னை: சென்னையில் 2 நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக இருவர்உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம்இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெரம்பூரில் 12 செமீ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 10 செமீ, அயனாவரத்தில் 9 செமீ, நுங்கம்பாக்கத்தில் 8 செமீ, டிஜிபி அலுவலகத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் புளியந்தோப்பு கே.பி.பூங்கா சந்திப்பு, பட்டாளம், வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி, மண்ணடி, பட்டாளம், பிராட்வே சாலை, தண்டையார்பேட்டை நேதாஜி நகர், ஜிபி சாலை, எழும்பூர் தமிழ்ச் சாலை, கிண்டி கத்திபாரா, ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவே மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போதே மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் மழைநீர் தேங்கிய என்எஸ்சி போஸ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தினர். ஏராளமான ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது.
2 சுரங்கப் பாலங்கள் மூடல்: கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட தியாகராயநகர் பகுதியில் நேற்று காலை தண்ணீர் தேங்கவில்லை. இதேபோன்று சில இடங்களில் தண்ணீர் தேங்காததால், மாநகராட்சியின் சேவையைப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். நேற்று முன்தினமே கனமழை பெய்திருந்த நிலையில், நேற்று காலை மாநகரில் பரவலாகக் கனமழை நீடித்தது. இதனால் பல இடங்களில் நேற்று வெள்ளநீர் தேங்கியது. நேற்று காலை வரை அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து இயல்பாக இருந்த நிலையில், நீடித்த கனமழையால் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வேசுரங்கப் பாலத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த மழைநீரில் மாநகரப் பேருந்து சிக்கிய நிலையில், அதிலிருந்த 26 பயணிகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் ரங்கராஜபுரம் சுரங்கப் பாலத்திலும் நீர் சூழ்ந்ததால், இரு பாலங்களும் மூடப்பட்டன. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இருவர் உயிரிழப்பு: இதனிடையே, வியாசர்பாடி, பக்தவத்சலம் காலனி, 2-வது தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன் (52), அதே பகுதியில் துக்க நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் மின் கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். புளியந்தோப்பு, பிரகாஷ் ராவ் காலனியை சேர்ந்த காய்கறி வியாபாரி சாந்தி (45) மீது மாடி கழிப்பறை மற்றும் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
மின்னக சேவை: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான புகார்களை ஒரே நேரத்தில் 75 பேரிடம் பெறும் வகையில் மின்னக சேவை மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மின்னக உதவிக்கு 9498794987 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சர்கள் ஆய்வு: இதற்கிடையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையை நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் ஆணையர், மேயர் ஆகியோர் மாநகரில் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். முன்னதாக அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் வெள்ள பாதிப்பைத் தடுக்க 220 கிமீ நீளத்துக்கு ரூ.710 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இதில் 157 கிமீ நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டன. இதனால் 5 முதல் 10 நாட்கள் வரை மழைநீர் தேங்கும் சீத்தம்மாள் காலனி, ஜிஎன்.செட்டி சாலை, பசுல்லா சாலை, கே.கே.நகர், பராங்குசபுரம், கொளத்தூர் போன்ற பகுதிகளில் சுமார் 10 செமீ மழை பெய்தும், அங்கு மழைநீர் தேங்கவில்லை.
2 ஆயிரம் அலுவலர்கள்: 1,305 கிமீ தூரத்துக்கு மழைநீர்வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டு 700 இடங்களில் நீர் தேங்கிய நிலையில், இப்போது சுமார் 40 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த ஆண்டு 1,200 மோட்டார் பம்புகள் தேவைப்பட்டன. தற்போது 400 இடங்களில் மட்டுமே மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 40 இடங்களில் மட்டுமே மோட்டார்கள் இயக்கப்பட்டன. இந்த மழையால் 19 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. வெள்ளத் தடுப்பு பணிகளில் பொறியியல் துறையின் 2 ஆயிரம் அலுவலர்கள், தூய்மைப் பணியில் 19 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.