தமிழகம்

2 விளக்குள்ள வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.91,130 - வள்ளியூர் அருகே ‘ஷாக்’ அளித்த மின்வாரியம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து(40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மொபைல் போனுக்கு கடந்த 2 நாட்களுக்குமுன் மின்வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது வீட்டுக்கு இருமாதத்துக்கான மின்கட்டண தொகை ரூ.91 ஆயிரத்து 130 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மின் கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதி என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது பாத்து செய்வதறியாது திகைத்தார். பின்னர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார். வழக்கமாக தனது வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.100-க்கும் குறைவாகவே வரும் என்றும், கடந்த மாதம் ரூ.65 மட்டுமே கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் 2 அறைகள் மட்டும்தான் உள்ளது. வீட்டில் இருப்பது மொத்தமே 2 பல்புகள்தான். அப்படி இருக்கையில் எவ்வாறு இந்த தொகை வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டிருக்கலாம் எனவும், 2 நாளில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும், அதுவரை பதற்றப்பட வேண்டாம் என்றும் மின்வாரிய ஊழியர்கள் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் முகமது பாத்துவுக்கு புதிய கட்டண ரசீதை மின்வாரியம் நேற்று அனுப்பியுள்ளது. அதில் கட்டணம் ரூ.122 என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்த பின்னரே அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

SCROLL FOR NEXT