உடைக்கப்பட்ட பாசன குழாய்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கக் கோரி சின்னமனூரில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற போராட்டம். 
தமிழகம்

தேனி | உடைக்கப்பட்ட பாசன நீர் குழாய்களுக்கு இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்

என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: உடைக்கப்பட்ட பாசனநீர் குழாய்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கக் கோரி சின்னமனூரில் விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளன. இதனால் முல்லைப் பெரியாற்றின் மூலம் நேரடிப்பாசனம் பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் ஆழ்குழாய் அமைத்து குழாய் மூலம் பாசனநீரை கொண்டு சென்று விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில், அனுமதியின்றி குழாய்கள் அமைக்கப்பட்டதாகக் கூறி கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முத்துலாபுரம்பிரிவில் உள்ள 37 பாசனக் குழாய்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். மீண்டும் இணைப்பு வழங்கக் கோரி இப்பகுதி விவசாயிகள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து வருவதுடன் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக இன்று சின்னமனூர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகளை காவல்துறையினர் மார்க்கையன்கோட்டை பிரிவு அருகே தடுத்து நிறுத்தினர். பின்பு விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு முல்லைப் பெரியாறு வைகை பாசன கூட்டமைப்பு தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகிக்க, போராட்ட குழு தலைவர் நாராயணசாமி, செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியேர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பாசனக்குழாய் அகற்றப்பட்டதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். நீர் இல்லாவிட்டால் விவசாயம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டு பலருக்கும் வேலை இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விரைவில் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இணைப்பு வழங்காவிட்டால் வரும் 8-ம் தேதி மீண்டும் இதுபோன்ற போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT