கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட அண்ணாமலை 
தமிழகம்

திமுக நிர்வாகியை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை கைது

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசிய திமுக நிர்வாகியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய, திமுக பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் மற்றும் கவுதமி குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், சைதை சாதிக்கின் பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (நவ.1) திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT